அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடைபெற்ற மறுநாள் அதாவது டிசம்பர் 24-ந் தேதி திமுக நிர்வாகியிடம் பலமுறை பேசியிருப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார். அந்த திமுக நிர்வாகி அமைச்சர் மா.சுப்ரமணியனிடமும் பேசியிருப்பதாகவும், எனவே இந்த வழக்கில் அவரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒரு வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளரிடம் பேசுவது ஒரு குற்றமா என்று வினவியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சாலையோர உணவகத்தை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அன்றைய தினம், சம்பந்தப்பட்ட குற்றவாளி, தனது செல்போனில் பலமுறை குறிப்பிட்ட சில நபர்களிடம் பேசியதாக புகார் எழுந்தது. குறிப்பாக சார் என்று அழைத்து பேசியதாகவும், யார் அந்த சார் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.
இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் டிசம்பர் 24-ந் தேதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை திமுக வட்டச் செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம் பேசியுள்ளதாக கூறியுள்ளார். அந்த கோட்டூர் சண்முகம் இரண்டு காவல் உயர் அதிகாரிகளிடம் பேசியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் பேசியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார். வழக்குப்பதிய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் 2 காவல்துறை உயரதிகாரிகள் வலியுறுத்தி உள்ளதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு கருணாநிதி பிறந்தநாளையொட்டி தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அண்ணா பல்கலைகழக சம்பவத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல் துறை மிகச்சிறப்பாக நடவடிக்கை எடுத்து 5 மாதத்தில் தண்டனை தரப்பட்டுள்ளது. போலீசாரின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார். அண்ணாமலை கூறியதை நானும் பார்த்தேன். அவர், சண்முகம் என்ற வட்டச் செயலாளர் என்னை அழைத்ததாக தெரிவித்து உள்ளார். இது ஒரு குற்றச்சாட்டா?
சென்னையில் 52 வட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சண்முகமும் ஒருவர். ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளரிடம் பேசியது எப்படி குற்றச்சாட்டாகும்? ஒவ்வொரு நாளும் 10 – 15 பேர் எனக்கு போனில் அழைப்பார்கள். வட்ட செயலாளர் போன் செய்தார். இதனால், சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என சொல்கின்றனர். இது என்னகுற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை என்றார்.
