மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிலைப்பாட்டை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட பாஜக, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மறைந்து போன நிலையில், ஒரு தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் உள்ள ஒரே எம்எல்ஏவின் ஆதரவுடன் செயல்படும் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸின் உறுதியான நிலைப்பாட்டை கேலி செய்வது வேடிக்கையானது” என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி இருந்தாலும், காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை அம்மாநிலம் பொருட்படுத்துவதில்லை என்பது தெரிந்த உண்மை. முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் மேகதாது அணையைக் கட்டியே தீர்வோம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்ததை நயினார் மறந்துவிட்டதாக தாகூர் சுட்டிக்காட்டினார்.
எடியூரப்பா தமிழ்நாடு எல்லைவரை வந்து போராட்டம் நடத்தியதையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. நதிநீர் பிரச்சினைகள் உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைகளை சுமூகமாகத் தீர்ப்பது மத்திய அரசின் முக்கியப் பொறுப்பு. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தக் கடமையை நிறைவேற்றாமல், தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போல் நடத்தி வருவதால் மக்கள் பாஜகவை ஏற்க மறுக்கிறார்கள் என்றார்.
காவிரி நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக் கூடாது என தெளிவாகத் தீர்ப்பளித்துள்ள நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க அனுமதி வழங்கியிருப்பது இரு மாநிலங்களிடையே மோதலைத் தூண்டும் அரசியல் நாடகம் என மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.
“ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் ஆட்சியில் இல்லை என்பது நயினாருக்கு தெரியும். ஆனால், ஆட்சியில் இருப்பவர்களே இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுக்க எந்தத் தியாகத்துக்கும் தயாராக உள்ளது” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், நயினார் நாகேந்திரனை நோக்கி, “கர்நாடக பாஜக தலைவரிடம் ‘தமிழ்நாடு பாலைவனமாகிவிடும் என்பதால் மேகதாது அணை கட்ட மாட்டோம்’ என ஒப்புதல் பெற்றுத் தர முடியுமா?” என்று சவால் விட்டார். ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் பதிலளித்த தாகூர், அயோத்தி ராமர் கோவில் காணிக்கையை சங்பரிவார கும்பல் திருடியது நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஊழல் பற்றி பாஜக தலைவர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான புகார்களைச் சுட்டிக்காட்டி, பாஜக தலைவர்கள் ஊழல் பேசும் முன் தங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
தமிழ்நாட்டு மக்கள் காவிரி விவகாரத்தில் யார் உண்மையாக நல்லது செய்கிறார்கள், யார் துரோகம் செய்கிறார்கள் என்பதை நன்கு அறிவார்கள். அதனாலேயே காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து பாஜகவை ஒதுக்கியுள்ளனர் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
