கரூருக்கு முதல்வர் விஜய் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்குக் உச்ச நீதிமன்றம் சவுக்கால் சாட்டையடி கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். தலையில் துண்டைக் கட்டி, மரம் அறுக்கு இயந்திரத்தை வைத்து, சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட வைகோ, ஜேசிபி இயந்திரத்தை இயக்கியும் சீமை கருவேல மரத்தை அகற்றினார். சீமைகருவேல மரத்தை அகற்றும்போது வேலி இழுத்து வைகோ கையில் அடிபட்டு ரத்தம் வெளியேறியது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தானும் ஆதரிப்பதாகக் கூறினார். தவெக அரசு கட்டிங், கமிஷன், கரப்ஷனை நீக்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்த வைகோ, தற்போது அரசு நிதிநெருக்கடியில் உள்ளதாகவும், அதனை எப்படி சமாளிப்பது என்று முதல்வர் ஜோசப் விஜய் திணறிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து ஆளுநரின் ஆய்வு குறித்தும், திமுக அவரிடம் அளித்த மனு குறித்தும் கடுமையாகச் சாடினார். கவர்னர் ஆட்சியை ஏன் கொண்டுவர நினைக்கிறீர்கள்? கவர்னர் வந்தால் இங்கு பிஜேபி தான் ஆட்சி செய்யும். அப்ப நீங்க பாஜகவை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் போலி நாடகமா? பாஜகவே வந்து ஆட்சி செய்துவிட்டு போகட்டும் த.வெ. க ஆட்சி செய்ய கூடாது என்ற நினைப்புதான் திமுகவுக்கு உள்ளதாக ஒரு பிடிபிடித்தார்.
முதல்வர் விஜய் கரூருக்கு போகக் கூடாது, பேசக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற திமுகவை உச்சநீதிமன்றம் சவுக்கால் அடித்துள்ளது. உச்சநீதிமன்றத்தையே அரசியல் மைதானம் ஆக்கப் போகிறீர்களா. அவர் ஏன் போகக்கூடாது? அதை எப்படி தடுக்க முடியும், எங்களை வைத்து தடுக்க உத்தரவு பெற வந்திருக்கிறீர்களா? என்று கடுமையாக உச்சநீதிமன்றம் சூடு கொடுத்த பிறகு திமுக வழக்கினை திரும்ப பெற்றுள்ளதாக கூறினார்.
இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெற்று முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பார் என்றார்.
தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் மு.க. ஸ்டாலினுடன் கருத்து பரிமாற்றம் தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு கேட்டதற்கு அது நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து அவ்வளவு தான் என்றார்.
