மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மோடி ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது….

‘உலக சமத்துவமின்மை ஆய்வகம்’ என்ற அமைப்பு வெளியிட்ட, ‘2026 உலக சமத்துவமின்மை’ அறிக்கையில், ‘இந்தியாவின் மொத்த செல்வத்தில், 40 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் உள்ள நாடு இந்தியா’ என்பது ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம், 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. 50 சதவீத மக்களுக்கு, 15 சதவீத வருமானமே செல்கிறது. இந்தியாவில் ‘வருமானம், செல்வம், பாலினம்’ ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது’ என்று, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமத்துவம், சமூக நீதியை விரும்பும் அனைவருக்கும், இது இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது போல உள்ளது.

‘இந்தியாவில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 2025 – 2026ஆம் ஆண்டில், 576 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 142 பேராக இருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது’ என நாடாளுமன்றத்தில் மோடி அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சி என்பது, அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சிதான் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டே செல்கிறார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள்; நடுத்தர மக்கள் வாங்கும் சக்தியை இழந்து கீழே சென்று கொண்டிருக்கிறார்கள்.

2014ஆம் ஆண்டில், சுமார் 44,000 கோடி ரூபாயாக இருந்த, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு, இப்போது சுமார் 7.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சொத்து குவிப்பில், அதானி குழுமம் கின்னஸ் சாதனை படைக்க உதவியதுதான், கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு நிகழ்த்திய ஒரே சாதனை.

பல்வேறு மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். மாறாக, ஒரு சதவீதம் பேரிடம், 40 சதவீத செல்வம் குவிந்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி. ஆட்சி நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி. இதற்காக மோடி அரசு வெட்கப்பட வேண்டும். இந்த அவலத்திற்கு ஏழைகள் நலனில் அக்கறை இல்லாத,  வலதுசாரி மனப்பான்மையே காரணம்.

பொருளாதார சமத்துவமின்மை என்பது, சிலிண்டருக்குள் அடைக்கப்பட்ட எரிவாயு போன்றது. அளவுக்கு அதிகமானால் வெடித்து சிதறிவிடும். பொருளாதார சமத்துவமின்மை தொடர்ந்தால், மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை வரும். அதானி, அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி அரசை, விரைவில் மக்கள் தூக்கி அறிவார்கள். இந்தியாவில் சமச்சீரான வளர்ச்சி சாத்தியமாக, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். விரைவில் அது நடக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version