விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ள செங்கமலப்பட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராம்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு ஆலை, வனப்பகுதியில் எந்தவிதப் பாதுகாப்பு முறைகளும் இன்றித் தகரக் கொட்டகைகள் அமைத்துச் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் இன்றும் அங்குத் தொழிலாளர்கள் தங்களது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி வேலை செய்துகொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தி உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளர் மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துச் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான ஆலை உரிமையாளர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
