மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய அரசை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள சண்முகசுந்தரபுரம் ஓடைப்பகுதியில் படர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தொடங்கி வைத்தார். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வேரோடு மரங்களைப் பிடுங்கி அகற்றும் பணியை நேரில் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்து விரிவாகப் பேசினார்.

வைகோ கூறுகையில், “விமானம் மூலம் தூவப்பட்ட வேலிக்காத்தான் விதைகளால் தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் பெருகி படுநாசத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டுக் கருவேலத்துடன் இவற்றை ஒப்பிடக்கூடாது. இந்த மரங்கள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன. மேலும், 50 முதல் 100 அடி ஆழம் வரை நிலத்தடி நீரை உறிஞ்சும் திறன் கொண்டவை. பறவைகள் இவற்றில் கூடு கட்டுவதில்லை; ஆடு, மாடுகள் இவற்றின் நிழலில் நின்றால் கூட சினை பிடிப்பதில்லை. இத்தகைய பாதகமான ‘பிசாசுச் செடியை’ அகற்ற வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கில் நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டனர்” என்றார்.

மரங்கள் வெட்டினால் மீண்டும் முளைக்கும் என்பதால், வேரோடு அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, மாநில அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் இப்பணியில் ஈடுபடவும், விரிவான திட்டத்தை உருவாக்கவும் வலியுறுத்தினார். மதிமுக வெறும் தேர்தல் கட்சி அல்ல என்று தெரிவித்த அவர், “முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுடன் களத்தில் நின்ற கட்சி மதிமுகதான். ஆனால், இத்தகைய முக்கியப் போராட்டங்களைச் செய்தி ஊடகங்கள் பெரிதாகக் காட்டுவதில்லை. மாலை நேர அரசியல் விவாதங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன” என்று விமர்சித்தார்.

மேகதாது அணை விவகாரம் குறித்தும் வைகோ தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார். “கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஒருமித்த தீர்மானம் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் இது மட்டும் போதாது. கர்நாடகாவுக்கு பின்னணியில் இருந்து தூண்டிவிடுவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான். தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்யும் மோடி அரசை முழுமுதல் வில்லன் எனக் குற்றம் சாட்டுகிறேன்” என்றார். 1965-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தைப் போன்று ஜாதி, மதம், கட்சி பேதமின்றி மாணவர்கள், இளைஞர்கள், தமிழக மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று வைகோ ஆவேசமாக வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version