இந்தியாவில் பருவமழை தாமதமானதாலும், அதன் வேகம் மந்தமாக இருப்பதாலும் நாட்டின் நீர் சேமிப்பு நிலைகள் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளன. மத்திய நீர் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் உள்ள 166 முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு அவற்றின் மொத்த கொள்ளளவில் வெறும் 28 சதவீதமாகக் குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நடப்பு பருவமழைக் காலத்தில், இதுவரையிலான மழையளவில் சுமார் 40 சதவீத பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் இருந்த சராசரி நீர் இருப்பை விட தற்போது சற்று அதிகமாக இருந்தாலும், இந்த சரிவுப் போக்கு விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின்சார உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கண்காணிக்கப்படும் 166 நீர்த்தேக்கங்களில், 20 நீர்த்தேக்கங்கள் முக்கிய நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கோபிந்த் சாகர், பஞ்சாபில் உள்ள தேன் அணை, ராஜஸ்தானில் உள்ள ராணா பிரதாப் சாகர், ஒடிசாவில் உள்ள ஹிராகுட், ஜார்க்கண்டில் உள்ள பஞ்செட் ஹில், குஜராத்தில் உள்ள உகாய் மற்றும் சர்தார் சரோவர், மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெஞ்ச் ஆகியவை அடங்கும்.

நாடு முழுவதும் நீர் இருப்பு சீரற்ற முறையில் காணப்படுகிறது. வட மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இருப்பினும், கிழக்கு, மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. அதாவது,  அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த ஆண்டை விட தற்போது நீர் இருப்பு சற்று கூடுதலாக உள்ளது.

ஆந்திரா, கோவா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நீர் இருப்பு கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில், தென்மேற்குப் பருவமழை கேரளாவுக்கு 8 நாட்களுக்கு முன்பே வந்து, நாடு முழுவதும் விரைவாகப் பரவியதால் அணைகள் வேகமாக நிரம்பின. ஆனால், நடப்பு ஆண்டில் மழை கேரளாவுக்கு மூன்று நாட்கள் தாமதமாக வந்தது மட்டுமின்றி, அதன் வேகம் மிகவும் மந்தமாக உள்ளதால், அணைகளுக்கு வரும் நீரின் வரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

பருவமழை முன்னேற்றம் தொடர்ந்து தாமதமானால், வரும் நாட்களில் விவசாயம் மற்றும் நீர் விநியோகம் கடும் சவால்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version