மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை கட்டமைப்பு சரி இல்லாமல் போனதால் தான் தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்ய தற்போதுள்ள அரசுக்கு கால அவகாசம் தேவை என்றும் இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார். இந்த கடுமையான பிரச்சினையை ஒரு மாதமே ஆன அரசிடம் கேட்பது தவறான செயல் என்றும் கடந்த 5  ஆண்டுகளில் இந்த கேள்வியை நாம் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றார்.

தமிழ்நாட்டில் 717 மதுபானக் கடைகளை மூடும் விஷயத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, அரசு இயந்திரம் என்ற இன்ஜினை பழுதாக்கி சென்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக உரிமைகள் சம்பந்தப்பட்ட விசயத்தில் ஒருபோதும் யாரிடமும் சமரசம் கிடையாது என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு என்றார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி எந்த தியாகத்திற்கும் தயாராக உள்ளது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version