டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள், தேர்வுக் கேள்வித்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை முடிப்பதற்கான புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நான் வாழ விரும்புகிறேன். ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உண்ணாவிரதத்தை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய உண்ணாவிரதத்தை முடிப்பதை பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு சில முக்கிய கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது முக்கிய கோரிக்கைகளில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவது, நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது பழிவாங்கும் வகையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்ற அரசின் உறுதியை வழங்குவது ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், சோனம் வாங்சுக்கின் கருத்தை விட கடுமையான நிலைப்பாட்டை சிஜேபி எடுத்துள்ளது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறைகேடுகளால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற ‘சலோ சன்சத்’ பேரணியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் மீது போலீசார் அதிகப்படியான பலத்தை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றமும் போலீசாரிடம் விளக்கம் கேட்டு, சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோ காட்சிகள் மற்றும் ஆவணங்களையும் பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது.

