காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.
மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி அளித்த பதிலில் இந்த முக்கியத் தகவல் இடம்பெற்றுள்ளது.
2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி நீர் தீர்ப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? மேகதாது திட்டத்திற்காக கர்நாடக அரசு அந்த மாநிலங்களின் அனுமதியைப் பெற்றுள்ளதா? மத்திய அரசிடம் உள்ள இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா எந்தவொரு கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், 2007-ம் ஆண்டு காவிரி நீர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை முறைப்படுத்தவும், அதன் நன்மைகளைப் பெறவும் உள்ள அதிகாரத்தை எந்தவொரு உத்தரவும் பாதிக்காது என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு 2019-ல் சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கும், மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கும் இணங்கத் திருத்தங்களைச் செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, மாநில அரசுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தப் பதில் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும், மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மேகதாது திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் உறுதியாக இருப்பதாக தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
