மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கோரி பிரதமரைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலையும் சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மனு அளித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த சட்டரீதியான தடைகள் மற்றும் மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்தத் திட்டத்தை விரைவாக ஆய்வு செய்து, மத்திய அரசு இறுதி ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இந்தநிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலையும் டி.கே.சிவக்குமார் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் நிலையில், இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய ஆணையையும் கர்நாடகா கட்ட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை மற்றும் சட்ட வல்லுநர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேகதாது விவகாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளது காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் அரசியல் ரீதியான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
