ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அழகி தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இரண்டாவது முறையாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 108 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்து நாட்டு சார்பாக பங்கேற்ற அந்நாட்டு அழகி மில்லா மேகி, போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி விலகியுள்ளார். உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக தெலங்கானாவுக்கு கடந்த 7-ம் தேதி வருகை தந்த அவர், குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்புவதாக கூறி கடந்த 16-ம் தேதி இங்கிலாந்து சென்றார்.
இந்த நிலையில் அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “போட்டியில், இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம். இது மிகவும் தவறானது. வித்தை காட்டும் குரங்குகளைப்போல அங்கு நாங்கள் அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை. சுரண்டப்படுவதற்காக யாரும் இங்கு வரவில்லை.
உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு விலைமாதுவாக உணர்ந்தேன். ஆகையால்தான், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்வகையிலும், இளைஞர்களை ஊக்குவிக்கவும் போட்டியில் இருந்து விலகினேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த போட்டி அமைப்பான மிஸ் வேர்ல்டு, ஆதாரமற்ற, பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார் எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த அழகிப் போட்டியில் அவருக்குப் பதிலாக யுனைடெட் கிங்டமைச் சேர்ந்த மற்றொரு அழகி போட்டியில் இடம்பெற்றுள்ளார்.
ஏற்கனவே கடந்த 16-ம் தேதி தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ள பலம்பேட்டில் இருக்கும் ருத்ரேஸ்வரா எனப்படும் கோயிலுக்கு அழகிகள் சென்றப் போது, அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள், அழகிகளின் கால்களை கழுவி பாத பூஜை செய்த விவகாரம் பூதாகரமானது. இது குறித்து தெலங்கானா காங்கிரஸ் அரசு வெளியிட்ட விளக்கத்தில் விருந்தினர்களை கடவுளாக பாவிக்கும் கொள்கையின் படி, நாம் பின்பற்றும் பாரம்பரிய நடைமுறை தான் இது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.