தேனி அருகே உள்ள தனியார் பருப்பு ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுரேஷின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம்
டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள தனியார் பருப்பு ஆலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை, மில் வளாகத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உடல் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர்கள் சந்தேகம் மற்றும் போராட்டம்
சுரேஷின் மனைவி நதியா மற்றும் உறவினர்கள், சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். மில் நிர்வாகம் தங்களுக்கு உரிய தகவல் அளிக்கவில்லை என்றும், கீழே விழுந்ததாகக் கூறும் நிர்வாகம் பல மணி நேரம் முதலுதவி சிகிச்சை கூட அளிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பெற்றுச் செல்ல மாட்டோம் என்று உறவினர்கள் கூறி வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது.
சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில், சுரேஷ் மில்லில் மேலே இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானாக விழுந்தாரா அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா என்பது குறித்து தெளிவான காட்சிகள் இல்லை. ஆனால், கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடி இறந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.