பெ.சண்முகம் களமாடியதும், போராடியதும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

முரசொலி நாளிதழில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம் குறித்து வெளியான செய்தியை வன்மையாகக் கண்டித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன். அந்த செய்தி அநாகரிகத்தின் உச்சம் என்று விமர்சித்த அவர், அரசியல் விவாதங்கள் நாகரிக எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த மாமனிதர் பெ.சண்முகம். காவேரி கரையோரத்தில் பிறந்த அவர், சிவப்புத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தவர். அவரது பங்களிப்பை ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது. ஒரு மனிதன் ஒரு ஆயுளில் செய்யக்கூடியதை விட அதிகமாக அவர் சாதித்துள்ளார்” என்று புகழ்ந்த அமைச்சர், அத்தகைய தலைவரை அவமதிக்கும் வகையில் முரசொலி எழுதியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

“அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவை மரியாதைக்குரிய எல்லைக்குள் இருக்க வேண்டும். டானிக் குடித்து வளர்ந்தவர் என்று எழுதியிருப்பது மிகவும் மோசமான அணுகுமுறை. திமுகவினர் டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவர்கள் என்பது போன்ற கேலியும், அவதூறும் நாகரிக அரசியலுக்கு ஒவ்வாதவை” என்று சாடினார். கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இத்தகைய எழுத்தை தீவிரமாகக் கண்டித்திருப்பார் என்று குறிப்பிட்ட ராஜ்மோகன், “நாகரிக அரசியலை நோக்கி அனைவரும் திரும்ப வேண்டும். சி.வி.சண்முகம் அவர்கள் அதிமுக அரசியலில் தீவிரமாக உள்ளார்.

அவரைப் பயன்படுத்தி பெ.சண்முகத்தை சிறுமைப்படுத்த முரசொலி முயல்வது பெரும் வன்மத்தை வெளிப்படுத்துகிறது. இருவரையும் ஒப்பிடுவதன் மூலம் பெ.சண்முகத்தின் பங்களிப்பை அவமதிப்பதாகும்” என்றார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்தச் செய்தியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் அறிவித்தார். “சிவப்புத் துண்டை இவ்வாறு அவமானப்படுத்தினால், இரட்டைப் போர் யானை மௌனம் காக்காது. ஒன்று, இரண்டு, மூன்று என்று சிந்துபாத் கதை போல வன்மத்தை கக்குவது அரசியல் நாகரிகத்துக்கு அழகல்ல” என்று எச்சரித்தார்.

அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் ஆரோக்கியமான விவாதங்களாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதல்களாக மாறக்கூடாது என்பது அமைச்சரின் தெளிவான செய்தியாகும். மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு அரசியல்வாதிகள் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version