போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மிக முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து பயணிகள் நெருக்கடி தொடர்ந்து வரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக தேர்தல் காலம், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் கூட்டம் அதிகரிக்கும் போது, போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை, குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படும் சிரமங்கள் என புகார்கள் பல்வேறு தரப்பிலும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரில் வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பயணிகள், குறிப்பாக இளைஞர்கள், போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று நேரடியாக கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் இத்தகைய புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினையைத் தீர்க்க வேண்டியது அமைச்சரின் அடிப்படைப் பொறுப்பு என்றாலும், அவர் அதிகாரத் திமிருடன் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலான காட்சிகளில், பேருந்து வராததால் கேள்வி கேட்ட இளைஞரை அமைச்சர் அவமானப்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, “நீ நல்லா சாப்பிட்டிருக்க” என்ற அவரது பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்து பயணிகளின் உணர்வுகளை மதிக்காத, அலட்சியமான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “மக்கள் பிரச்சினையை அமைச்சர் தீர்க்க உறுதியளிக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக கேள்வி கேட்ட இளைஞரை அவமானப்படுத்தும் வகையில் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், “GOAT படத்தில் நீங்கள் டிராஃபிக் போலீஸ் கேரக்டரில் நடித்தது போல பேசுகிறீர்கள். இது சினிமா காட்சி அல்ல, மக்கள் பணி. மக்களின் துயரை உணருங்கள்” என்றும் அதிமுக சாடியுள்ளது.

தவெக அரசின் போக்குவரத்துத் துறையின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. பயணிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அதிகார வர்க்க மனப்பான்மையுடன் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கவும், பயணிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version