தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் சேர்க்கை நடவடிக்கையை சீரமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஒரே மாநிலத்தில் தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை விரைவாக நிறைவு செய்து கொள்ளும் நிலையில், அரசு கல்லூரிகளில் மட்டும் பெருமளவில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, தற்போதைய சேர்க்கை முறையில் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் 1,044 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசு கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் 43 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

இது மாணவர்களின் ஆர்வக் குறைவு அல்ல; மாறாக, சேர்க்கை நடைமுறைகளில் உள்ள திட்டமிடல் குறைபாட்டின் வெளிப்பாடாகும்.

அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதால், மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் இந்த நிலைமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு கல்லூரிகளில் தரமான கல்வி குறைந்த கட்டணத்தில் கிடைக்கக்கூடிய சூழல் இருந்தும், நிர்வாக தாமதங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை காரணமாக மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு தள்ளப்படுகின்றனர்.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு நடைபெற்று முடிந்த பிறகே நடைபெறுகின்றது. இதே நடைமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கையிலும் பின்பற்றப்பட வேண்டும். எனவே, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்க்கை செயல்முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் கலந்தாய்வு முறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

மேலும், அரசு கல்லூரிகளின் சேர்க்கை அட்டவணை, காலியிட விவரங்கள் மற்றும் கலந்தாய்வு தகவல்கள் முழுமையாக வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். உயர்கல்வி என்பது சமூக நீதியின் அடித்தளம். அந்த வாய்ப்பை ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் இழக்காதவாறு, அரசு உடனடியாக செயல்திறன் மிக்க சேர்க்கை சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version