ஈரான் தனது ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவினால், “நாளைக்கே போர் தொடங்கலாம்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால், அமெரிக்காவின் உதவியின்றி இஸ்ரேலே நேரடியாகத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ மற்றும் தூதரக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் காட்ஸ், “ஈரான் எதன் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் சமன்பாட்டை இஸ்ரேல் ஒருபோதும் ஏற்காது. ஈரான் தாக்கினால், இஸ்ரேல் பதிலுக்குத் தக்க அடி கொடுக்கும். இதற்கான இலக்குகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு சூழல்கள் இருப்பதாக குறிப்பிட்ட காட்ஸ், எந்தவொரு வெளிநாட்டு உதவியையும் சாராமல், இஸ்ரேல் தனது சொந்த பலத்தில் தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
ஈரானின் உச்சத் தலைவரான மொஜ்தபா காமேனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காட்ஸ், “மரணத்திற்கு குறி வைக்கப்பட்டுள்ளார். மேலும், ஈரானியப் பேச்சாளர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் சலுகைகளைப் பெற முயற்சிக்கும் “நல்ல வியாபாரிகள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால், பெய்ரூட்டின் தஹியே மாவட்டத்தைத் தாக்கும் என்று காட்ஸ் எச்சரித்துள்ளார். தென் லெபனானில் இஸ்ரேல் தற்போது கட்டுக்குள் வைத்துள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், அங்கு தங்களுக்குத் தரைப்பகுதி ஆக்கிரமிப்பில் ஆர்வம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டாலும், ஈரான் தாக்கினால் இஸ்ரேல் பதிலடி கொடுப்பது எதையும் சார்ந்தது அல்ல என்று காட்ஸ் கூறியுள்ளார். “டிரம்ப் இஸ்ரேலின் நண்பர்; அவருக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது தெரியும்” என்றும் அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்தத் தீவிரமான சூழல், உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
