இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரமுமான எம்.எஸ். தோனிக்கு 45வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ராஞ்சியில் 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி அன்று பிறந்த மகேந்திர சிங் தோனி (MS Dhoni) இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்த இனிய நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்டின் ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் அவர், உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வீரர். ரயில்வே டிக்கெட் புக் செய்யும் ஊழியராக இருந்து, உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவும், வெற்றிகரமான கேப்டனாகவும் உயர்ந்த அவரது பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

தோனியின் ஆரம்ப காலம் மற்றும் அறிமுகம்: பீகார் (தற்போதைய ஜார்கண்ட்) மாநிலத்தைச் சேர்ந்த தோனி, தனது இளம் வயதில் கால்பந்து மற்றும் பேட்மிண்டன் விளையாடியவர். இவரது பள்ளிப்படிப்பை ராஞ்சியில் உள்ள டிஏவி ஜவஹர் வித்யா மந்திரில் பயின்றார். இவர் தனது பள்ளிப்பருவத்தில் பூப்பந்து மற்றும் கால்பந்தில் சிறந்து விளங்கினார். பின்னர் கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 2004 டிசம்பரில் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர், விரைவில் தனது ஹெலிகாப்டர் ஷாட் மற்றும் அமைதியான தலைமைக்கு பெயர் பெற்றார். 2005ல் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் செய்தார்.

சர்வதேச சாதனைகள்: தோனி இந்திய அணியை 2007 முதல் லிமிட்டெட் ஓவர்ஸில் கேப்டனாக வழிநடத்தினார். டெஸ்ட் கேப்டனாக 2008 முதல் 2014 வரை பொறுப்பேற்றார். அவர் இந்திய அணியை மிக அதிகமான சர்வதேச போட்டிகளில் (331) கேப்டனாக வழிநடத்தியவர் மற்றும் மிக வெற்றிகரமான இந்திய கேப்டன்.

முக்கிய சாதனைகள்: 2007 ICC T20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் T20 உலகக் கோப்பையை வென்றார். இது அவரது கேப்டன்சியில் முதல் பெரிய வெற்றி.

2011 உலகக் கோப்பை: இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்று 28 ஆண்டுகால காத்திருப்பை முடித்தார். மும்பை வான்கடேயில் இலங்கைக்கு எதிராக இறுதி ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட்டால் வெற்றியை உறுதி செய்த காட்சி இன்றும் இந்திய ரசிகர்களின் இதயத்தில் பசுமையாக உள்ளது.

2013 ICC சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் மூன்று வெவ்வேறு ICC லிமிட்டெட் ஓவர்ஸ் டிராபிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார்.

ஆசியக் கோப்பையை 2010, 2016, 2018 (அணி உறுப்பினராக) ஆகிய ஆண்டுகளில் வென்றார். டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு சென்றார். விக்கெட் கீப்பிங்கில் உலக சாதனைகளைப் படைத்தவர் எம்.எஸ் தோனி. அமைதியான மனநிலை, விரைவான ஸ்டம்பிங் மற்றும் பினிஷிங் திறன் ஆகியவை அவரை தனித்துவப்படுத்தின.

ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே உடன் பயணம்: ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ‘தல’ (Thala) என்று அழைக்கப்படும் தோனி, 2008 முதல் அணியை வழிநடத்தி வருகிறார். 5 IPL பட்டங்கள் (2010, 2011, 2018, 2021, 2023), 2 சாம்பியன்ஸ் லீக் T20 பட்டங்கள் (2010, 2014) வென்றுள்ளார். சிஎஸ்கே-வை 10 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற சாதனையும் அவருக்கு உண்டு. ஐபிஎல்-ல் 5,000+ ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், IPL-ல் தொடர்ந்து விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

விருதுகள் மற்றும் கவுரவங்கள்:

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா (2008) – இந்தியாவின் உயரிய விளையாட்டு விருது.
பத்ம ஸ்ரீ (2009)
பத்ம பூஷண் (2018) – இந்தியாவின் மூன்றாவது உயரிய civillian விருது.
அர்ஜுனா விருது, ICC ODI Player of the Year (இருமுறை), ICC Cricket Hall of Fame (2025).
இந்திய ராணுவத்தில் லெப்டினெண்ட் கர்னல் கௌரவ பதவி (2011).

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மரபு: 2010ம் ஆண்டு சாக்ஷி எனபரை திருமணம் செய்துகொண்டார் எம்.எஸ் தோனி. இவர்களுக்கு ஸிவா தோனி என்ற மகள் உள்ளார். ரசிகர்களிடம் எளிமை, அமைதி மற்றும் தலைமைத்துவத்திற்காக புகழப்படும் தோனி, பைக்கிங் மற்றும் விலங்குகள் மீதான ஆர்வத்திற்கும் பெயர் பெற்றவர். அவரது ‘ஃபினிஷர்’ திறன், அழுத்தத்தின் கீழ் எடுக்கும் முடிவுகள், இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவை அவரை ‘தலைவர்’ ஆக்கியுள்ளன.

45வது பிறந்தநாளில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், CSK ஆதரவாளர்கள் முழு நாடும் தோனியை கொண்டாடுகின்றனர். அவரது பயணம் வெறும் ரன்கள் அல்லது பட்டங்கள் அல்ல; அது உழைப்பு, பொறுமை மற்றும் நம்பிக்கையின் கதை. தோனி என்றென்றும் இந்திய கிரிக்கெட்டின் இதயத்தில் நிலைத்திருப்பார். எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஹேப்பி பர்த்டே தல!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version