முல்லைப் பெரியாறு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த டிசம்பர் மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் புதிய கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு கடந்த 15 தினங்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 130 அடிக்கும் மேலாக உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை புதிய கண்காணிப்பு துணைக் குழுவினர்,இன்று முதல் முறையாக அதன் இயக்குனர் கிரிதர் தலைமையில், தமிழக அரசின் சார்பில் தலைமை பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம் மற்றும் கேரள அரசு தரப்பில் தலைமை பொறியாளர் லியன்ஸ் பாபு, உதவி பொறியாளர் ஜிசித் ஆகியோர் அடங்கிய துணை கண்காணிப்பு குழுவினர் அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மெயின் அணை,பேபி அணை, மதகுகளின் இயக்கம் ,கேலரி, கசிவுநீர் உள்ளிட்ட அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் அணையின் நீர்மட்டம் 130.45 அடிக்கு ஏற்ப கசிவு நீர் நிமிடத்திற்கு 52.12 லிட்டர் என கணக்கீடு செய்தனர். மேலும் அணையில் உள்ள 13 மதகுகளில் 3, 6, 9ஆகிய 3 மதகுகளை இயக்கி சரி பார்த்தனர். மதகுகளின் இயக்கம் சீராக இருந்தது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதை துணை கண்காணிப்பு குழுவினர் உறுதிப்படுத்தினர்.
பின்னர் தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயினுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது முதன்மை கண்காணிப்பு குழுவில் ஆலோசனைகளை பெறவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.