தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன படை அமைக்கப் போகிறார் முதல்வர் விஜய் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் என்பவர், கடன் உதவி அளிப்பதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், தனது நண்பர்களுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி அவர்களையும் பலியாக்கியதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பாவிக்கும் மனித மிருகங்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து பாதுகாக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “வெளியில் உள்ள குற்றவாளிகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற சிங்கப்பெண் சிறப்புப் படை அமைத்ததாக விளம்பரம் செய்யும் முதல்வர், தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?” என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, “மாற்று அரசியல்” என்று முழங்கியவர்களிடமிருந்து தினந்தோறும் பாலியல் குற்றங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தவெகவினரின் பெயர்கள் முன்னுக்கு வருவது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த காலத்தின் தீய சக்திகளின் தொடர்ச்சியாகவே தற்போதைய இந்த துரோக சக்தி செயல்படுவதாகவும், “தவெகக்காரன்” என்ற சொல்லே குற்றங்களுடன் தொடர்புபடுத்தப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் தமிழகம் பெரும் தலைகுனிவுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்த நயினார் நாகேந்திரன், இப்படிப்பட்ட குற்றவாளிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஆளும் கட்சியின் உள்ளார்ந்த பிரச்னைகளை முதலமைச்சர் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண் பாதுகாப்பு குறித்து பேசும் அரசியல் கட்சிகள், தங்கள் அமைப்புகளுக்குள் இருக்கும் குற்றப் போக்குகளை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்துள்ளது. சேலம் போலீஸார் இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முழு விவகாரமும் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
