தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் கார் பந்தய சாதனைகள் மற்றும் அவரது மோட்டார் ஸ்போர்ட் பயணத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்: இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ (Gladiators: In Pursuit of Challenges) ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான அஜித்குமார், 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 63 திரைப்படங்களில் அஜித் நடித்துள்ளார். இந்தநிலையில், ஷாலினி அஜித்குமாரின் ‘பிரேவ் ஹார்ட்ஸ் ப்ரொடக்‌ஷன்’ (Brave Hearts Production) நிறுவனம் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 64வது படமான டேர் டெவில் படத்தில் நடிக்க உள்ளார்.

திரையுலகத்தை தாண்டி, கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார் சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வருகிறார். இதற்காக தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing) மூலம் பல்வேறு சர்வதேச பந்தயங்களில் அவர் பங்கேற்ற அனுபவங்கள், மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்களை இந்த ஆவணப்படம் விரிவாகப் பேசவுள்ளது.

இப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்க, நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் ‘கோல்டன் ட்ராபி ஃபிலிம் ப்ரொடக்‌ஷன்’ (Golden Trophy Film Production) நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் புதிய போஸ்டரில் அஜித் முழு ரேசிங் உடையில் தோன்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. திரையுலகைத் தாண்டி பந்தய களத்தில் அஜித்தின் மறுபக்கத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version