விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்துள்ளதாகவும், விவசாயிகளுக்காக 100 முறை கூட கைதாகத் தயார் என்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயப் போராட்டம் மற்றும் தனது கைது நடவடிக்கை குறித்து உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தான் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி ஆளுங்கட்சியினர் அவதூறு பரப்பியதாகவும், விவசாயிகளின் துயர் துடைக்கத் தவறிய அரசு பிரச்சினைகளை திசைதிருப்பவே தன்னை கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை அலைக்கழிப்பதாக நினைப்பவர்கள், யாரையோ திருப்திப்படுத்த முயல்கிறார்கள் என்று உதயநிதி விமர்சித்துள்ளார்.
தான் கைது செய்யப்பட்டபோது ஊடகங்களைப் பார்த்து இதைக் நகைச்சுவையாக பார்ப்பதாகக் கூறிவிட்டு வந்ததாகவும், காவல்துறையைப் பார்த்து தான் பயந்து ஓடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின்போது அடுத்தவர்களுக்குப் பயந்து ஓடியது யார் என்பது நாடறியும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். தான் கலைஞரின் பேரன் மற்றும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன் என்றும் இந்த அடக்குமுறைகளுக்கு எல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3,000 கிலோ மீட்டர் அழைத்துச் சென்றாலும் செல்லத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது கைது நடவடிக்கையைக் கண்டித்து குரல் கொடுத்த தோழமை இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு உதயநிதி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

