தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் தொடர் மின்வெட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகிறது. இரவு நேரங்களில் வீடுகள் இருளில் மூழ்க, வியாபார நிறுவனங்கள், சிறு தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பாட்டை தடைபடுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் மின்வெட்டு நிலை தொடர்வது மக்களை மட்டுமின்றி தொழில்துறையையும் பெரிதும் பாதித்துள்ளது. மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல, மாநிலத்தின் அத்தியாவசிய சேவையும் கூட. ஆனால் ஆட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் இல்லாததே பிரச்னையின் மூலம்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 19,126 மெகாவாட் அளவுக்கு வெளி மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) மொத்தக் கடன் தொகை 2.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு மூலம் மட்டும் 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 5,700 மெகாவாட் திறன் கொண்ட பல மின் உற்பத்தித் திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தாமதமாகி வருகின்றன. தற்போதைய அனல் மின் திட்டங்களிலும் உற்பத்தி காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும் நிலையில், அரசு என்ன திட்டங்கள் வகுத்துள்ளது என்பதை வெளிப்படையாக சட்டசபையில் தெரிவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். “அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மின் உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த மின்வெட்டு தொடரும்” என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், பல மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் சீரமைக்கப்படாமல் உள்ளதால் உற்பத்தித் திறன் குறைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். முன்பு “நான் ஒரு தூய சக்தி. என்னிடம் வாருங்கள், எல்லாம் கிடைக்கும்” என்று கூறிய முதல்வர் ஜோசப் விஜய், தற்போது நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு என்ன தீர்வு வழங்கப் போகிறார் என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர். தமிழகத்தின் மின் சுயசார்பை உறுதி செய்ய அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களை இருளில் தவிக்க விடக்கூடாது என அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version