நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, 47 என்.டி.ஏ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேர்வு முகமையின் செயல்பாடுகளைச் சீரமைக்கும் நோக்கில், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் 47 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீக்கப்பட்டதாக கூறப்படும் அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டுமன்றி, கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என தெரிகிறது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் பல நாட்களாக மாணவர்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, என்.டி.ஏ அமைப்பில் போதிய நிரந்தர பணியாளர்கள் இல்லாததும், ஒப்பந்தப் பணியாளர்களை அதிகம் நம்பியிருந்ததும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது இந்தச் சிக்கல்களைச் சரிசெய்யும் வகையில் முகமையின் கட்டமைப்பை முழுமையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

