தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) பெற ஆவலுடன் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் ஆறு லட்சம் விண்ணப்பதாரர்கள், எப்போது தங்கள் புதிய அட்டை கிடைக்கும் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 2 கோடியே 28 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் மூலம் விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டு என்பது வெறும் பொருள் வாங்கும் ஆவணம் மட்டுமல்ல; அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகளைப் பெறுவதற்கான முக்கிய அடையாளச் சான்றாகவும் திகழ்கிறது. எனவே புதிய கார்டு பெற மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மார்ச் மாத இறுதி வரை இந்தத் தடை நீடித்தது. அதன் பின்னர் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், முழு வேகத்தில் நடைபெறாததால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. பலர் ரேஷன் கார்டு இல்லாததால் அரசு திட்டங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி, மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் புதிய கார்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21,000 மனுக்களைத் தவிர மற்றவை ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனையில் உள்ளன. அடுத்த மாதங்களில் மேலும் 3 லட்சம் விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டதால், தற்போது மொத்தம் 6 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

அரசு அதிகாரிகள் தரப்பில், முதல் 3 லட்சம் விண்ணப்பங்களுக்கான அட்டைகளை அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பின்னர் வந்த 3 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வரவில்லை. புதிய கார்டு வழங்க 7 முக்கிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக, ஒரே கதவு எண்ணில் பல குடும்பங்கள் வசிப்பதாக விண்ணப்பிக்கும் சம்பவங்களில் கள ஆய்வு, விசாரணை அவசியமாகிறது. இதனால் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மக்கள் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆகக் குறைக்கும் யோசனை ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழை எளிய முதியவர்கள் பயனடைவர்.

இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தத் தேவையான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை அரசு துரிதப்படுத்தினால், ஏராளமான மக்களின் நலன் உறுதி செய்யப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version