சென்னை கோபாலபுரத்தில் கண்காட்சியில் பங்கேற்ற பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது; –
தற்போது பள்ளி வாகனங்கள் நிறைய விபத்துகளில் சிக்குகின்றன. எனவே பள்ளி வாகனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் பள்ளி நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.
திருப்பூரில் 56 வயது தலைமை ஆசிரியர் மாணவிகள் பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது பொறுக்கமுடியவில்லை. பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கப் பெண் படை வந்தபிறகும் பெண்கள் அசிங்கப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இது எல்லாவகையிலும் தடுக்கப்படவேண்டும்.
சிங்கப்பெண் படைக்கு என்ன தனி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?
ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் கூப்பிட்டு அதிகாரிகள் சென்றால் தண்டிக்கப்படுவீர்கள் என தமிழக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசியல் அனுபவே இல்லாத இளைய அமைச்சர் ஒருவர், ஆளுநரை மரியாதை இல்லாமல் பேசுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
வைகை ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்று ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் ஒரே கட்சியில் இருப்பதே இன்று அதிசயமாகி விட்டது. ஆட்சி மாறியதும் எம்.எல்.ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்துவிட்டு மக்கள் அளித்த தீர்ப்பையும் மதிக்காமல் வந்து விடுகிறார்கள் .
41 நகராட்சி அலுவலகங்களில் லஞ்சப்பணம் பிடிபட்டிருக்கிறது. இதற்கு முந்தைய அரசும், தவெக அரசும் தலைகுனிய வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை தொடர வேண்டும்.
அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை நீதிமன்றமே கண்டித்துள்ளது. 6 மாதத்தில் ஆட்சி மாறும் என அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டுவது சரியானதல்ல.
தவெக அமைச்சர்கள் அநாகரிகமாகப் பேசுவது தவிர்க்கப்படவேண்டும்.
பெண்கள் பாதுகாப்பிலும், அரசுப் பணி வழங்கப்படுவதிலும் முதலமைச்சர் கவனம் செலுத்தவேண்டும்.
ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்களை தேர்வு செய்ததில் பணநடமாட்டம் இருப்பதாகக் குற்றச்சாட்டு வந்துள்ளது. தங்கள் மீது குற்றச்சாட்டு வராத வகையில் இந்த ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேகதாது அணையைத் தடுக்க அங்குள்ள காங்கிரஸ் அரசும், இங்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸும் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
