தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசரக்கால நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப் படைக்கு, தற்போது பிரத்யேகமான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 10ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிங்கப் பெண் அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதைச் செயல்படுத்தும் விதமாக சிங்கப் பெண் அதிரடிப் படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டு, அந்த படையின் ஐஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

சாதாரண காவல்துறை சீருடைகளில் இருந்து மாறுபட்டு, களத்தில் பணியாற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படையினரை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படையினர் களப்பணிகளில் ஈடுபடும் போது தடையின்றி செயல்படும் வகையில், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீடித்த உழைக்கக்கூடிய துணிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சீருடை அறிமுகத்தின் மூலம், அதிரடிப் படையினரின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, பொதுமக்களிடையே அவர்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையும் மேலும் வலுப்பெறும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நகரின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் இடங்களில், குற்றங்களைத் தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிங்கப்பெண் அதிரடிப்படை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கான இந்த புதிய சீருடை, அவர்களின் பணியை இன்னும் நேர்த்தியாகவும், அதிகாரப்பூர்வமாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள், தமிழகக் காவல் துறையின் பெண்கள் பாதுகாப்பு முயற்சிகளில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version