ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. இந்த நடவடிக்கை காஷ்மீரில் தீவிரவாத சக்திகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரின் பிரபல லால் பஜார் பகுதி, ஜம்மு நகரம் மற்றும் தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், தொலைபேசிகள் மற்றும் பிற ஆதாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைகள் தொடர்பான விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் 2024 பிப்ரவரியில் ஜமாத்-இ-இஸ்லாமியை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து, தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது. உபா (UAPA) சட்டத்தின் கீழ் இந்த தடை அமல்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பது மற்றும் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுவது என பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.

என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தபடி, தடை விதிக்கப்பட்ட பிறகும் சில தீவிரவாத சக்திகள் ஜமாத்-இ-இஸ்லாமியை மறைமுகமாக மீண்டும் செயல்படுத்தி, பிரிவினைவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பின்னணியில் தான் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடரும் விசாரணையின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு காஷ்மீர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய பெயராக இருந்து வருகிறது. பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் இந்த அமைப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தடை நீட்டிக்கப்பட்ட பின்னரும் அமைப்பின் சில உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மறைமுக வழிகளில் செயல்பட முயல்வதாக உளவு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்புப் படைகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளன.

என்ஐஏவின் இந்த சோதனைகள் பிரிவினைவாத அமைப்புகளுக்கு வலுவான எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையில் தொடர்புடைய நபர்கள் யார் என்பதை கண்டறிய என்ஐஏ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விரைவில் கூடுதல் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version