ஈரோடு மாவட்டம் கள்ளியம்புதூர் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த கள்ளியம்புதூரில் டாஸ்மாக் (கடை எண்  3935 ) செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை அகற்றக் கோரி கடந்த அதிமுக, திமுக ஆட்சிகளிலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

கடந்த மாதம் அப்போதிய முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றதும் குறிப்பிட்ட அளவிலான மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.  இந்த உத்தரவின் பேரில் ஏற்கனவே அப்பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மார்க் கடைகள் அகற்றப்பட்ட நிலையில்,வட்டாரப் பகுதியில் இந்த ஒரு மதுக்கடை மட்டும் உள்ளதால் அப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் ஏராளமானோர் இங்கு திரண்டு வருகின்றனராம்.

இந்த டாஸ்மாக் அருகிலேயே பேருந்து நிறுத்தம்,குறிப்பிட்ட தொலைவில் பள்ளிகள் என உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

எனவே இந்த டாஸ்மாக்கை அகற்ற வலியுறுத்தி மீண்டும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைக்குப் பிறகும்  சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version