பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக, கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தப்பட்ட 6 மணி நேரத் தீவிர விசாரணை நிறைவடைந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான  நிலங்கள், போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நில மோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவின்படி, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார், அன்றைய காலகட்டத்தில் பணியில் இருந்த அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

அதன்பேரில், திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பின்வரும் 4 முக்கிய அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். மாரிமுத்து (பழனி கோயில் முன்னாள் இணை ஆணையர்), மாரியப்பன் (ஓய்வுபெற்ற தாசில்தார்), சின்னச்சாமி (ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி), சிவனேசன் (இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்) ஆகியோரிடம் சிபிசிஐடி தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா தலைமையில் நடைபெற்ற விசாரணை நடைபெற்றது. அதில், நிலங்களின் பத்திரப் பதிவுகள், போலி பட்டா மாறுதல்கள் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட அனுமதி ஆவணங்கள் குறித்து 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும், கூட்டாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, நில மோசடியில் தொடர்புடைய மேலும் சில முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. விசாரணை முடிவில் வழக்கில் முக்கியத் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version