அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் மற்றும் மோதல் போக்குக்கு இடையே, பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக ஈரானின் உயர் மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஈரானிய உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமேனி தலைமையிலான உயர் மட்டத் தூதுக்குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தது. அங்கு அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் நிலவரம், தாக்குதல்களை நிறுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு சார்ந்த முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சியால் அமெரிக்கா- ஈரான் இடையில் கடந்த மாதம் 60 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் அமெரிக்கா- ஈரான் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பப்பட்டது. ஆனால், ஹார்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதால், மீண்டும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வர முக்கிய மத்தியஸ்தராக பாகிஸ்தான் மீண்டும் செயல்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே முன்பே எட்டப்பட்ட ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ கைநழுவிப் போகாமல் தடுக்கவும், மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் பாகிஸ்தான் இந்த பின்னணி ராஜாங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
