திருவாரூர் மாவட்டத்தில் கோடைப் பயிரான பருத்தியின் அறுவடை முடிந்ததைத் தொடர்ந்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்கள் உழைப்பின் பலனை நல்ல விலையில் பெற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மறைமுக ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு சராசரியாக ரூ.9,121-க்கு விற்பனையாகியுள்ளது. தரமான பருத்தியை எடுத்து வரும் விவசாயிகளுக்கு நல்ல விலை உறுதி செய்யப்படும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று பருத்தி விற்பனை நடைபெற்றது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நூற்பாலை மில்ல் உரிமையாளர்கள் மற்றும் பருத்தி வணிகர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பருத்தியின் தரத்தை ஆன்லைன் மூலம் சோதனை செய்து, தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) வாயிலாக மறைமுக ஏலத்தில் விலை நிர்ணயம் செய்தனர்.

இந்த ஏலத்தில் தரமான பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ.9,479-ம், குறைந்தபட்ச விலை ரூ.8,099-ம், சராசரி விலை ரூ.9,121-ம் பெற்றது. இதன் மூலம் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை உயர்வு கண்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விற்பனைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வணிகர்களே நேரடியாகச் செலுத்தும் ஏற்பாடு இங்கு உள்ளது. இது விவசாயிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான வருமானத்தை உறுதி செய்கிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலாளர் கண்ணன், தனி அலுவலர் திலகவதி, கண்காணிப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் ஏலத்தை சீராக நடத்தினர். “தரமான பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என செயலாளர் கண்ணன் உறுதியளித்தார்.

இந்த வெற்றிகரமான விற்பனை, திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், e-NAM போன்ற தொழில்நுட்ப வசதிகள் விவசாயிகளுக்கு நேரடி பலனைத் தருவதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version