தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவின் 51ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோயிலில் வெள்ளித் தேர் வடம் பிடித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் ஜூலை 23ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படவுள்ள சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி, ரசிகர்கள் ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு உதவிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நற்பணி பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கந்தபுராணம் அரங்கேறிய புனிதத் தலமான குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித் தேர் வடம் பிடித்தல் நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அகில இந்திய கவுரவத் தலைவர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய செயல் தலைவர் ஆரியராஜ், அகில இந்திய அமைப்பாளர் ஹரிராஜ் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, நடிகர் சூர்யா நீடூழி வாழவும், அவரது குடும்பத்திற்கு நலம் சூழவும் சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளித் தேரில் எழுந்தருள, கோயிலை வலம் வந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். தேர் இழுக்கும் நிகழ்ச்சியின்போது பக்தர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து பக்திப் பாடல்கள் இசைத்து சூழலை புனிதமாக்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில், கலந்துகொண்ட அனைத்து பக்தர்கள் மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு இனிப்புகளுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஏற்பாட்டினை காஞ்சிபுரம் மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத் தலைவர் எஸ். பாண்டியன், செயலாளர் ஜெய் கணேஷ், நகரத் தலைவர் எஸ். தனுஷ் பத்மநாபன், குணா, கார்த்திக் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
சூர்யாவின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை சமூகப் பணிகளுடன் கொண்டாடுவது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

