கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே இடையூறாக பேனர் வைப்பதைத் தட்டி கேட்ட போக்குவரத்து ரோந்து காவலரைத் தாக்கி, அவரது கையை உடைத்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர் – மயிலாடுதுறை சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியான கும்பகோணம் நால்ரோடு சந்திப்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவில் திருவிழாவிற்காகப் பேனர்கள் வைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்திற்கு முற்றிலும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையின் குறுக்கே இந்தப் பேனர்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்தப் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தேவேந்திரன், போக்குவரத்தைச் சரிசெய்யும் நோக்கில் சாலையின் குறுக்கே இருந்த பேனர்களை அகற்றுமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். மேலும், பேனர்களை அகற்ற அவரே முயன்றதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தவெக வார்டு உறுப்பினர்களான அருண் மற்றும் காளி  ஆகிய இரு இளைஞர்களும் காவலர் தேவேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காவலர் தேவேந்திரனின் வலது கை மணிக்கட்டு பகுதியில் பலத்த எலும்பு முறிவு  ஏற்பட்டது.

தாக்குதலைத் தொடர்ந்து, இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். படுகாயமடைந்த காவலரை மீட்ட சக போலீசார், அவரை சிகிச்சைக்காகக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தார். தீவிரத் தேடுதலுக்குப் பின் தலைமறைவாக இருந்த காளி என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த மற்றொரு குற்றவாளியான அருண், கும்பகோணம் நீதிமன்றத்தில் நேராகச் சென்று சரணடைந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது சிறையில் அடைத்துள்ளனர். காவலர் மீதான இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version