தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பெரம்பூர், கொளத்தூர்,மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள்  மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுபோல, 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தபபட்ட  பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்தரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் மனுதாரர் சுட்டிக்காட்டிய கடைகளில் 5 கடைகள் மூடப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டு,  மீதமுள்ள கடைகளுக்கான இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு குறித்து கடை வாரியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படாததையும், நுகர்வோருக்கு ரசீதுகள் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்வதற்காக, வழக்கினை ஆகஸ்ட் 7 ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version