கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்தடுத்து வெவ்வேறு நாடுகளில் புதிய தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் ’சைக்ளோஸ்போரியாசிஸ்’ என்ற கடுமையான குடல் சார்ந்த பாக்டீரியா/ ஒட்டுண்ணித் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதுவரை நாட்டின் 31 மாநிலங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் 86-க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றால் மிச்சிகன் மாநிலம் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு மட்டுமே 1,562 வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக அங்கு ஆண்டுக்கு 40 முதல் 50 வழக்குகள் மட்டுமே பதிவாகும் நிலையில், இந்த திடீர் உயர்வு சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தவிர ஒஹாயோ, நியூயார்க், இல்லினாய்ஸ், டெக்சாஸ் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சைக்ளோஸ்போரியாசிஸ் என்றால் என்பது இது ‘சைக்ளோஸ்போரா’ என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் பரவும் ஒரு உணவுவழி நோயாகும். இதன் அறிகுறிகள்,
* கடுமையான சோர்வு
* கட்டுப்படுத்த முடியாத வயிற்றுப்போக்கு
*வயிற்று வெடிப்பு, வாயுத் தொல்லை, குமட்டல்
* பசியின்மை மற்றும் லேசான காய்ச்சல்
இந்த ஒட்டுண்ணி ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாக சுவாசப் பாதை வழியாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ பரவாது. அசுத்தமான பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மூலமாக பரவுகிறது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகியவை இணைந்து இந்தத் தொற்றின் மூலத்தைக் கண்டறிய தீவிரமாக முயன்று வருகின்றன. எனினும், பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்தத் தொற்றுப் பரவல்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று சிடிசி தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பல நாட்களுக்கு முன்பு சாப்பிட்ட உணவுகளை நினைவுகூர்வதில் சிரமம் இருப்பதால், தொற்றுக்கான சரியான உணவுப் பொருளைக் கண்டறிவது சவாலாக உள்ளது.
