மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில், கடந்த ஜூன் 30-ம் தேதி 17 வயது சிறுமியும், பார்த்திபன் என்ற இளைஞரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் மரணம், அப்பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதலை உருவாக்கியது. இந்த விவகாரத்தில், சிறுமியின் குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரது தந்தை லட்சுமிகாந்தன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கேட்டும் பாமக, மாவீரன் வன்னியர் சங்கம், முக்குலத்தோர் பாசறை, நாடார் இளைஞர் பேரவை மற்றும் திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சிறுமியின் தாயார் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், “சிறுமியைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டபோதே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிர் பலியைத் தடுத்திருக்கலாம். ஆனால், தற்போது சிறுமியின் குடும்பத்தினர் மீது மட்டும் ஒருதலைப்பட்சமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுவன் தரப்பினர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு, புதிய வீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version