திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த பெற்றோரை, போலீசார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார். மணப்பாறை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளி ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், மணப்பாறைக்கு வந்த அவர்கள், பின்னர் ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், சித்திரைவள்ளியின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு கார்களில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் ஆட்டோவை வழிமறித்து சித்திரைவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக கடுமையாக எதிர்த்து போராடினார். காரின் கண்ணாடிகளை உடைத்து மனைவியை மீட்க முயன்றபோதும், கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணை காரில் ஏற்றி உறவினர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

உடனடியாக அஜித்குமார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான காவல்துறையினர் கடத்திச் செல்லப்பட்ட காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சித்திரைவள்ளியை பாதுகாப்பாக மீட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் அக்கா கணவர் அவரது உறவினர்கள் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணத்தை ஏற்க மறுத்ததால் இந்த கடத்தல் முயற்சி நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் முயற்சி சம்பவம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version