மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆந்திரப்பிரதேசத் துணை முதலமைச்சர் பவன் கல்யாணை, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட தசைப் பாதிப்பு மற்றும் எலும்பு முறிவு காரணமாக, அவருக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஜூலை 11-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலின்படி, அறுவை சிகிச்சை எந்தவிதச் சிக்கலுமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பவன் கல்யாண் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் அவரது தோள்பட்டை செயல்பாடு முழுமையாகச் சீரடையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை சென்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பவன் கல்யாண் எப்போதும் மக்களுக்காக உழைப்பவர். மக்களைச் சந்திக்கும்போது தன்னை மறந்து தீவிரமாகச் செயல்படுவதால் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பல நாட்களாக இந்த வலியால் அவதிப்பட்டு வந்தார். தற்போது நன்றாகக் குணமடைந்து வருகிறார்,” என்று தெரிவித்தார். 

சந்திப்புக்கு முன்னதாக, தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்த சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் விரைவாகக் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version