அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகாலப் போர் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் 24 மணி நேரத்தில் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து போரைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறித்தும், இஸ்ரேல் மீதும் ஈராக் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிரமாக மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பு பிரதிநிதிகளும் இஸ்லாமாபாதில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த அமைதி ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடுதல் மற்றும் இரு நாடுகளும் தங்கள் மோதல் போக்கைக் கைவிடுதல் ஆகியவை இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்திற்கான இறுதி வரைவை ஏற்றுக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சனிக்கிழமை (ஜூன் 13) தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்குள் மின்னணு முறையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று கூறியிருந்தாலும், ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இதனை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதி குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும், பொருத்தமான நேரத்தில் அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்த வதந்திகளைக் கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும், இரு நாட்டு நலன்களையும் பாதுகாக்கும் வகையிலான ஒரு சிறந்த தீர்விற்காக முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

