கிராமப்புற வாழக்கையை தத்ரூபமாக திரையில் சித்தரித்த பாரதிராஜாவின் படைப்புகள் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரும், கிராமிய வாழ்க்கையை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்தவருமான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக ஜூன் 10, 2026 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. பாரதிராஜாவின் மறைவு திரையுலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜா, தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941இல் பிறந்தவர். உண்மையான பெயர் சின்னசாமி. கிராமப்புற வாழ்க்கையின் நுணுக்கங்கள், மனித உறவுகள், காதல், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை தன் படங்களில் அற்புதமாக சித்தரித்து புகழ் பெற்றவர். 1977ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், ஸ்ரீதேவியை நட்சத்திரமாக்கினார். அதன் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’, ‘வேதம் புதிது’, ‘கிழக்கு சீமையிலே’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவை புரட்சிகரமாக மாற்றினார்.
அவரது படைப்புகள் கிராமத்து மக்களின் வாழ்வை யதார்த்தமாக பிரதிபலித்ததால், பார்வையாளர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆறு தேசிய விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் (தென்), ஆறு தமிழ்நாடு அரசு விருதுகள், நந்தி விருது, 2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். பல இளம் நடிகர்-நடிகையரை (ரேவதி, ராதிகா, ராதா போன்றோர்) அறிமுகப்படுத்தியதும் அவரது முக்கிய பங்களிப்பு.
அவரது உடல் நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கடிதமும் எழுதினார். கடிதத்தில், “கிராமப்புற வாழ்க்கையை தத்ரூபமாக திரையில் சித்தரித்தது பாரதிராஜாவின் சிறப்பு. அவரது கலைப் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமை தர வேண்டும்” என்று குறிப்பிட்டார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது படைப்புகள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து ரசிகர்களை ஈர்க்கும்.
