ந்திய ஐஸ்கிரீம் சந்தையில் பல ஆண்டுகளாக ப்ரோசன் டெசர்ட்ஸ் (frozen desserts) எனப்படும் உறைந்த இனிப்புகள் பெரும் பங்கை வகித்து வருகின்றன. பாலில் செய்யப்படும் உண்மையான ஐஸ்கிரீமிற்கு மாற்றாக, மிகக் குறைந்த விலையில் இவை விற்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் இதனை ஐஸ்கிரீம் என்றே நினைத்து வாங்கி உண்கின்றனர்.

ஐஸ்கிரீமுக்கு மலிவு மாற்றாக விளங்கும் இவை, பெரும்பாலும் பாலில் உள்ள கொழுப்பிற்குப் பதிலாக காய்கறி எண்ணெய்கள், அதிக அளவு சர்க்கரை, செயற்கை சுவைகள், வண்ணங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகவே, ‘குவாலிட்டிஸ்’ (Kwality’s) போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் பிரோசன் டெசர்ட் தயாரிப்புகளை நிறுத்திவிட்டு, அடுத்த ஆண்டுக்குள் முழுமையாகப் பால் சார்ந்த (Dairy-based) தயாரிப்புகளுக்கு மாறப்போவதாக அறிவித்துள்ளன.

உறைந்த இனிப்புகள் ஏன் ஆரோக்கியத்திற்கு கேடு?

ப்ரோசன் டெசர்ட்ஸ் (frozen desserts) எனப்படும் உறைந்த இனிப்புகளில் உள்ள முக்கிய கேடுகள் என்ன என்பதை உணவியல் நிபுணர்கள் விளக்குகிறார்கள். அவை இங்கே…

1 தாவர எண்ணெய்

பாரம்பரிய ஐஸ்கிரீம்கள் தூய்மையான பால் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ப்ரோசன் டெசர்ட்டுகளில் ஹைட்ரஜனேற்றப்பட்ட அல்லது தரம் குறைந்த பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பாலின் உண்மையான சுவையையோ, தரத்தையோ அல்லது ஊட்டச்சத்துக்களையோ வழங்குவதில்லை.

2. கொட்டிக்கிடக்கும் சர்க்கரை அளவு

இவற்றில் சேர்க்கப்படும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உடல் பருமன் (Obesity), இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance) மற்றும் ‘டைப் 2 நீரிழிவு’ (Type 2 Diabetes) போன்ற நோய்களுக்குக் காரணியாக அமைகிறது. அதோடு, இது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கும் (Fatty liver disease) உடலில் நாள்பட்ட வீக்கங்களுக்கும் வழிவகுக்கிறது.

 

3. செயற்கை சேர்க்கைகள் (Artificial Additives)

பாலின் அடர்த்தியையும் சுவையையும் போலியாகக் கொண்டுவர இவற்றில் அதிகப்படியான சுவையூட்டிகள், நிறமூட்டிகள், எமுல்சிஃபையர்கள் (Emulsifiers) மற்றும் பிரசர்வேட்டிவ்கள் (Preservatives)சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே ஆரோக்கியமான உணவுகள் குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், நிறுவனங்கள் தங்களின் இந்த ஃபார்முலாவை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

4. குடல் மற்றும் வளர்சிதை மாற்ற பாதிப்பு

அதிகப்படியான ரசாயனங்கள் கலந்த இந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன. இதனால் வயிறு உப்புசம், கடுமையான மலச்சிக்கல் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தில் (Metabolic disorders) சமநிலையற்ற தன்மை ஏற்படுகின்றன.

5. ஊட்டச்சத்தில்லா வெற்று கலோரிகள்  

ப்ரோசன் டெசர்ட்டுகள் உடலுக்கு வெறும் கலோரிகளையும் தேவையற்ற கொழுப்பையும் மட்டுமே தருகின்றனவே தவிர, பாலில் இயல்பாக இருக்க வேண்டிய கால்சியம் அல்லது வைட்டமின்கள் போன்ற எந்தவொரு அத்தியாவசிய ஊட்டச்சத்தையும் வழங்குவதில்லை.

பால் சார்ந்த பொருட்கள் ஏன் சிறந்தவை?

பால் இயற்கையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. உயர்தரப் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் பி12. புரதம் தசை ஆரோக்கியத்திற்கும், நிறைவான உணர்விற்கும் உதவுகிறது. கால்சியம், பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகின்றன. வைட்டமின் பி12 நரம்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. மேலும், பால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கின்றன. குழந்தைகள், இளம்பருவம், முதியோர் ஆகியோருக்கு பால் சார்ந்த பொருட்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். ஆனால், இவையும் இனிப்புகள் என்பதால், மிதமாக உட்கொள்ள வேண்டும்.

அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்

பால் சார்ந்த தயாரிப்புகளும் ஒரு வகையான இனிப்பு தான் என்பதால், அவற்றையும் நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். இருப்பினும், வெறும் சர்க்கரையும் தாவர எண்ணெயும் மட்டுமே நிறைந்த பிரோசன் டெசர்ட்டுகளை விட, உண்மையான பாலில் செய்யப்படும் தயாரிப்புகள் ஊட்டச்சத்து அடிப்படையில் எவ்வளவோ மேலானவை. உறைந்த இனிப்புகளைத் தவிர்த்து, பால் அடிப்படையிலான உண்மையான ஐஸ்கிரீமைத் தேர்ந்தெடுப்பது, உடல்நலத்தை மதிக்கும் ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும். உறைந்த இனிப்புகள் பொருளாதாரத்தில் மலிவு வழியாகத் தோன்றலாம். ஆனால் அவற்றின் நீண்டகால உடல்நலச் செலவு மிக அதிகம்.

எனவே, இனி கடைகளுக்குச் சென்று ஐஸ்கிரீம் வாங்கும்போது, அதன் கவரில் ‘Ice Cream’ என்று அச்சிடப்பட்டுள்ளதா அல்லது ‘Frozen Dessert’ என்று அச்சிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்குங்கள். மூலப்பொருட்களின் பட்டியலை (Ingredients label) படித்துப் பார்த்து வாங்கும் விழிப்புணர்வு மட்டுமே நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைக் காக்கும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version