இந்திய அஞ்சல் துறை, விரைவு தபால் சேவைகளில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளில், முதன்முறையாக ‘ஆவணம்’ மற்றும் ‘பார்சல்’ ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை சரியாக வகைப்படுத்தி, குறைந்த கட்டணத்தில் அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும்.
மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள், அச்சிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆவணப் பிரிவில் சேர்க்கப்படும். வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், கணக்கு அறிக்கை, டெபிட்-கிரெடிட் கார்டுகள், பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவை இந்தப் பிரிவில் இடம்பெறும். ரக்ஷாபந்தன் காலத்தை முன்னிட்டு, 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் ஆவணமாகக் கருதப்படும். இவற்றைத் தவிர வணிகப் பொருட்கள், மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் வகைப்படுத்தப்படும்.
புதிய ‘24 விரைவு தபால்’ சேவை மூலம் பொருட்கள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். ‘48 விரைவு தபால்’ மூலம் 48 மணி நேரத்திற்குள் சென்றடையும். தற்போது இந்த சேவைகள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
பொதுமக்களுக்கு 24 மணி நேர சேவையில் 50 கிராமுக்குக் குறைவான பொருளை உள்ளூருக்கு அனுப்ப ரூ.38, நாட்டின் பிற பகுதிகளுக்கு ரூ.94 வசூலிக்கப்படும். எடை மற்றும் தூரத்தைப் பொறுத்து கட்டணம் ரூ.38 முதல் ரூ.186 வரை இருக்கும். 48 மணி நேர சேவைக்கு ரூ.61 முதல் ரூ.121 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர சேவை ரூ.38-100, 48 மணி நேர சேவை ரூ.48-72 வரை கட்டணம் இருக்கும். ஜிஎஸ்டி கூடுதலாக விதிக்கப்படும்.
இந்த மாற்றங்கள் ஆவணங்களை தனியாக வகைப்படுத்தி, குறைந்த கட்டணத்தில் வேகமாக அனுப்ப உதவும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தபால் நிலையங்களில் விவரங்களை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
