திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததையடுத்து “200 தொகுதிகளில் வெற்றி” என்ற முதல்வரின் முயற்சி எளிதாகும் என திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இது பற்றி அறிவாலய வட்டார தகவல் தெரிவிப்பது, “தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உறுதியாக வரும் என எதிர்பாத்த அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இதன்மூலம் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி வலிமையடையும் என எதிர்பார்த்தவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போயுள்ளது. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாலேயே தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா திமுக கூட்டணிக்கு வந்துள்ளார்.
ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு பிரேமலதா பங்கேற்றதை வைத்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும்; தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாகும் என செய்தி பரவியது. அப்படிப்பட்ட சூழலில் பிரேமலதா எடுத்த முடிவு அந்தக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியாக தேமுதிக அமர்ந்தது.
அதுவே அடுத்த 2019, 2020ம் ஆண்டுகளில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா ‘சீட்’ தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதிமுக தரவில்லை. இது பிரேமலதாவிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவே மறுபுறம் தற்போது ராஜ்யசபா சீட் கிடைக்கப்போகும் திமுக கூட்டணியில் இணைந்ததன் வாயிலாக தன்னை ஏமாற்றிய பழனிசாமிக்கு பிரேமலதா பாடம் புகட்டியுள்ளார். சமீபத்தில் நடந்த தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் 60க்கும் அதிகமான மாவட்டச் செயலர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது.
எனவே ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 8000 ஓட்டுகளை வைத்துள்ள தேமுதிகவை சேர்த்தால் இலக்கை எட்ட முடியும் என கணக்கு போட்டு திமுக காய் நகர்த்தி உள்ளது. அந்த வகையில் தேமுதிகவால் திமுக கூட்டணிக்கு பலம் கிடைத்துள்ளது. வட மாவட்டங்களில் வலுவான பாமக இரண்டாக பிளவுபட்டுள்ளதால் திமுகவோடு இணைந்துள்ள தேமுதிக வட மாவட்டங்களில் மீண்டும் வலுவடைவந்து அது கூட்டணிக்கும் வலு சேர்க்கும். அதேபோல தென் மாவட்டங்களில் மட்டும் ஓரளவுக்கு செல்வாக்குள்ள அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவுக்கு ஆதரவான நிலையில் இருப்பதால், இன்னும் சொல்லப்போனால் திமுகவில் இணையும் நிலை தென்படுவதால் அவருக்கு ஆதரவான முக்குலத்தோர் வாக்குகளில் கணிசமான பகுதியும் திமுகவுக்கு வந்து சேரும். இதனால் ‘தேசிய ஜனநாயக கூட்டணி முக்குலத்தோர் ஓட்டுகளை முழுமையாக பெற முடியுமா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தென் மாவட்டங்களில் இருக்கும் நாயுடு சமூக மக்கள் மத்தியில் வலுவாக இருக்கும் தேமுதிகவால் திமுகவுக்கு அப்பகுதியில் கூடுதல் பலம் கிடைக்கும் என ஒரு கணக்கு உள்ளது. தற்போதைய அரசியல் நிகழ்வுகளால் தேமுதிக தேய்ந்த நிலையில் இருந்து மாறி மீண்டும் துளிர்க்கும் நிலை ஏற்படடிருக்கிறது. இந்தப்பக்கம் பார்த்தால், காங்கிரசின் அடாவடிகளால் மனம் வெதும்பி இருந்த உடன் பிறப்புகளுக்கு தற்போது ஒரு தெம்பு கிடைத்துள்ளது.
தேமுதிக கூட்டணிக்கு துவக்கத்திலிருந்தே முயற்சி எடுத்து வெற்றி பெற்ற கனிமொழி போல அதிமுகவில் எவ்வளவோ பேர் இருந்தும் யாரும் முயற்சி எடுக்காதது திமுகவுக்கு பலம் தான்” என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவே இந்தப்பக்கம் எம்.ஜி.ஆர்., மாளிகை வட்டாரத்தில் விசாரித்தால், கூட்டணி கட்சியான தேமுதிகவை நழுவவிட்டுவிட்டார் எபடப்பாடி பழனிசாமி என்கின்றனர் சில ரத்தத்தின் ரத்தங்கள். இவர்களோடு கமலாலய வட்டாரத்தினரும் சேர்ந்து கொள்கின்றனர். அவர்களது தகவலின்படி, “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் பொறுப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக மேலிடம் ஒப்படைத்திருந்த நிலையில் தேமுதிகவை கோட்டை விட்டு விட்டதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர் பாஜகவினர். தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதில் பிரேமலதா வைத்த கோரிக்கைகளை பழனிசாமி ஏற்கவில்லை. இருந்தபோதும் மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் பிரேமலதாவிடம் பேச்சு நடத்த முயன்றார். ஆனால் அவரிடம் பேச பிரேமலதா ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்கும் பணியில் அமைச்சர்கள் வேலு, நேரு, முதல்வரின் மருமகன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதை அறிந்த பாஜக, தேமுதிகவின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்து கூட்டணியில் சேர்க்கும்படி பழனிசாமியை மீண்டும் அறிவுறுத்தியது. ஆனால், அவர் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்தே திமுக கூட்டணியில் இணையும் முடிவை தேமுதிக எடுத்தது. இவ்வாறு கூட்டணியில் இருக்கும் காட்சிகளை நழுவ விட்டால் என்ன செய்வது? என புலம்புகின்றனர் கமலாலய, எம்.ஜி.ஆர் மாளிகை வட்டார தோழர்கள்.

