திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவரின் குழந்தைகளை நிதி நிறுவன ஊழியர்கள் அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சமையல் கேஸ் சிலிண்டரையும் தூக்கிச் சென்றுள்ளனர்.
மல்லணம்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமு. இவருக்கு சசிகலா (45) என்ற மனைவியும் தேவதர்ஷன் (19) என்ற மகனும், ரித்திகா (17) என்ற மகளும் உள்ளனர்.
இதில் ரித்திகா அந்த பகுதியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சசிகலா மகளிர் சுய உதவி குழு மூலம் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். கடந்த மாதம் இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இவரது வீடு சேதம் அடைந்திருந்ததால், அந்த கடன் தவணைத் தொகையை சசிகலா கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த வத்தலக்குண்டு தனியா நிதி நிறுவன ஊழியர்கள் அழகாபுரியில் உள்ள சசிகலா வீட்டுக்கு சென்று, கடந்த வாரம் அவரது மகன் தேவதர்ஷனை அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அலுவலகத்தில் தங்க வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். நேற்று பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த சசிகலாவின் மகள் ரித்திகாவை அந்த நிதி நிறுவன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மதியம் வரை உட்கார வைத்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுள்ளனர்.
கடன் தவணை தொகை செலுத்தாத காரணத்திற்காக மகன், மகளை அழைத்துச்சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டில் சமையலுக்காக பயன்படுத்த வைத்திருந்த கேஸ் சிலிண்டரை தூக்கிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பள்ளி செல்லும் மாணவியை கடன் தவணை செலுத்தவில்லை என்பதற்காக அழைத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது குடும்பத்தார் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
