முற்போக்கு சிந்தனைகளை பொம்மலாட்டக் கலையின் மூலம் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்ற மறைந்த கலைமாமணி மு.கலைவாணனின் படத்திறப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.
இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, ஓவியர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
விழாவில் பேசிய கி.வீரமணி, “மறைந்த கலைவாணனின் தந்தை முத்துக்கூத்தன், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டிருந்தாலும், கலைத்துறையில் என்.எஸ். கிருஷ்ணனையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அதனால் தான் தனது மகனுக்கு கலைவாணன் என்று பெயர் வைத்தார்” என்றார்.
மேலும், “சமூக மாற்றத்திற்கான கருத்துகளை கலைவாணர் திரைப்படங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றார். இன்று சிலர் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் திராவிட பாரம்பரியம் தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தாண்டி நிலைத்து நிற்கும். அதை யாராலும் அசைக்க முடியாது” என்று வலியுறுத்தினார்.
கலைத்துறையின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், “நம் இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கக்கூடிய சூழல் இன்று கலைத்துறையிலேயே அதிகமாக உள்ளது. கலை சமூகத்தை மாற்றும் வலிமை கொண்டது. அதே நேரத்தில் தவறான பாதைக்கும் அழைத்துச் செல்லும் சக்தியும் அதற்கு உண்டு என்று பெரியார் முன்பே எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கை இன்றும் பொருந்துகிறது” என்றார்.
பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை கொண்டவை என்றும், அவற்றை தொடர்ந்து பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்றும் கலைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். “கலை என்பது உயர்ந்தவர்களுக்கானது அல்ல; எளிய மக்களுக்கானது. மக்களை சீர்திருத்தும் கருவியாக கலையை பயன்படுத்த வேண்டும். அதற்கு திராவிடர் கழகம் எப்போதும் துணை நிற்கும்” என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.

