இந்திய திரையுலகை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குநர்களில் மிக முக்கியமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது பாகுபலி திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அளவில் அதிக வசூலை குவித்ததுடன், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து அவர் இயக்கி இருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பாகுபலியை போன்றே பான் இந்தியா திரைப்படமாக உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அத்தோடு இப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு கூத்து பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அவரது அடுத்த லட்சியப் படைப்பான வாரணாசி திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சுமார் ரூ.1,400கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் கி.பி.512 முதல் தற்காலம் வரை திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ‘மகேஷ் பாபு’ கதாநாயகனாக ‘ருத்ரா’ மற்றும் ‘ஸ்ரீராமர்’ என இருவேறு பரிமாணங்களில் நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் மந்தாயினி என்ற கதாபாத்திரத்தில் உலகளாவிய நடிகையான ப்ரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ப்ரியங்காவின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் 2027-ல் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
