தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி என்ற ஆகப் பெரும் நடிகர்களுக்கு இடையே இருந்த தொழில் முறையான போட்டி, அவர்களுக்கு பிறகு ரஜினி – கமல் இடையே தோன்ற ஆரம்பித்தது. இருவரும் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் ரசிகர்கள் இரு பிரிவினராக இருந்து தங்களுக்குள் இருவருக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இருவரும் சேர்ந்து 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், தில்லு முல்லு என சில படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், இருவரும் ஒருசேர முழுநேர படங்களில் நடிக்கவில்லை.
பல நேரங்களில், பல இடங்களில், பல ரசிகர்கள் ரஜினி – கமல் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடித்தால் எப்படி இருக்கும்? சீக்கிரம் அதனை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்தி வந்தனர். சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது. இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக கடந்தாண்டு தகவல் ஒன்று வெளியாக இருவரின் ரசிகர்களும் குஷியில் ஆழ்ந்தனர்.
படம் எந்த மாதிரியான படமாக இருக்கும்? யார் இதனை இயக்குவார்? ஆக்ஷனா, காமெடியா? இருவரில் யார் ஹீரோ யார் வில்லன் என பல கேள்விகள் எழத் தொடங்கியது. இதுக்கு முன்னதாக ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. முதலில் அப்படத்தை சுந்தர்.சி இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அதிலிருந்து சுந்தர்.சி விலகினார். பின்னர் இந்தக் கூட்டணியில் டான் பட இயக்குநர் சி.பி.சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து தான் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்கப் போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.
இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிப்பதாகவும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும், அனிரூத் இசையமைப்பதாவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்சனுடன் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கமலும், ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இருவரது அறைக்கு முன் நின்று கொண்டிருக்கும் நெல்சன் யாருடைய அறைக்கு முதலில் செல்வது என்று யோசித்து பிறகு அனிரூத் வழிகாட்டுதல் படி, ஒவ்வொருவரின் அறைக்குள்ளும் சென்று அவர்கள அணியும் ஆடை, ஷூ, கண்ணாடி, என ஒவ்வொன்றையும் மற்றவர் தேர்ந்தெடுத்தை விடுத்து மற்றொன்றை தேர்வு செய்து இருவரும் ஒரே நேரத்தில் எதிர் எதிர் அறையில் இருந்து மாஸாக வெளியேறுகின்றனர்.
பிறகு ஒரே காரில் நால்வரும் அமர்ந்திருக்க, யார் படத்தின் ஹீரோ என கமல்ஹாசன் கேட்க, நெல்சன் திரு திரு என முழிக்க, சொல்லுங்க என ரஜினி மிரட்ட அங்கிருந்து கார் பறக்கிறது.. இப்படியாக வெளியான புரோமோ வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். 45 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் இருதரப்பு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
