நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும், கூடுதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பட்டியலும் அதிகமாக இருந்ததால், இந்த முறை அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பொதுமக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்….
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025 – 26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச் மாதம் துவங்கியது. இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தரப்பில் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டது.
அதன் பயனாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் நேற்று வரை, 16 ஆயிரத்து 491 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் சேர்க்கை நடந்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.