தமிழகத்தில் பட்ஜெட் பணிகள் நடந்து வருவதால், மரியவில்சன் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மரிய வில்சன், தனது அண்ணன் வீட்டில் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத நிலைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2022 ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் மரிய வில்சனின் அண்ணன் மரிய கிளோத் வீட்டிற்கு சென்ற மரிய வில்சன் மற்றும் அவரது தந்தை நெஸ்டோர் ஆகியோர், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அண்ணன் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை ஆபாசமாகத் திட்டியதுடன், உருட்டுக் கட்டையால் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், கெரோலினின் ஆடைகளைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாகவும், “செயின்ட் ஆண்டனி பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம்” என மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. படுகாயமடைந்த மரிய கிளோத் தம்பதியினர் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயப்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் மரிய வில்சன் மற்றும் நெஸ்டோரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் (மாஜிஸ்திரேட் சேரலாதன்) விசாரணையில் உள்ளது. பல மாதங்களாக வழக்கு விசாரணைக்காக வாய்தா அளிக்கப்பட்டபோதிலும், மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. கடந்த மாதமும் அவர் ஆஜராகாத நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற இன்று (ஜூலை 4, சனிக்கிழமை) கட்டாயம் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் இன்றும் மரிய வில்சன் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி, “தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பான முக்கியப் பணிகள் நடைபெறுவதால் அமைச்சர் நேரில் வர முடியவில்லை” என விளக்கம் அளித்தார். இதற்கு நீதிபதி சேரலாதன் கடும் அதிருப்தி தெரிவித்தார். “இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால்தான் ஆஜராகும்படி உத்தரவிட்டேன். இப்போதும் வரவில்லையே?” எனக் கேள்வி எழுப்பினார்.
வரும் 6-ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் உத்தரவிட்ட நீதிபதி, வக்கீல் அதற்கும் முடியாது எனத் தெரிவித்ததையடுத்து, ஜூலை 10-ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என இறுதி உத்தரவு பிறப்பித்தார். புகார்தாரர் தரப்பில் வக்கீல் பிரவீன் ஆஜரானார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏறப்போக்கியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தபோதும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து தவிர்ப்பது குறித்து பலரும் விமர்சனம் செய்கின்றனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
